வரலாற்றில் முதற்தடவையாக விவசாயிகளுக்கு இலவச உரம்“சுபீட்சத்தின் நோக்கில் கமத்தொழில் மறுமலர்ச்சி” எனும் திட்டத்தின் ஊடாக இம்முறை பெரும் போக நெற்செய்கைக்குரிய உரத்தினை இலவசமாக கமநல சேவை நிலையங்களில் பெற்றுகொள்ள முடியுமென யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேட்டு நிலப்பயிர்களுக்கு மானிய அடிப்படையில் (ரூபா 1500.00 க்கு) தேவையான அளவு உரம் பெற்று கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மறவன்புலவில் இடம்பெற்ற கமக்கார அமைப்பு அலுவலகம் மற்றும் அதனோடு இணைந்த உரக் களஞ்சியத்தை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

நமது ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ விவசாயதுறையில் எமது நாடு முன்னேற்றம் அடையவேண்டும் என சிந்தித்துகொண்டிருக்கிறார்.

விவசாயிகளின் குடும்பங்களும் அவர்களது சமூகங்களும் நாட்டின் முன்னேற்றகரமான நிலைக்கு வரவேண்டும் என்பதே அவரது நோக்கு.

கடந்த வாரம் யாழ்ப்பாணம் வருகை தந்த கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே “சுபீட்சத்தின் நோக்கில் கமத்தொழில் மறுமலர்ச்சி” எனும் திட்டத்தின் ஊடாக பல விவசாய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க போவதாக கூறியிருந்தார்.

இவை விவசாய பெருமக்களுக்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதங்கள் ஆகும். புதிய அரசாங்கத்துடன் எங்களுக்கு தேவையானவற்றை பெற்று பொருளாதார ரீதியில் முன்னேறி செல்வோம்.

ஒவ்வொரு விவசாயிகளும் மழை, வெயில் பாராது தமக்காக உழைக்கவில்லை, நாட்டுக்காக சேவையாற்றுகிறீர்கள் என்பதே உண்மையாகும்.

விவசாயிகள் சேற்றில் கால் வைத்தாலே நாம் அனைவரும் சோற்றில் கை வைக்க முடியும் என்பது கூற்று மட்டுமல்ல அதுவே நிதர்சனம் என அவர் தெரிவித்துள்ளார்.

hey