வவுனியாவில் கிராம அலுவலரின் பெயரை முறைகேடாக பயன்படுத்தி வீட்டுத்திட்ட பயனாளிகளிடம் பணம்பெற முயற்சிவவுனியா, பண்டாரிக்குளம் கிராம அலுவலரின் பெயரைப் முறைகேடாக பயன்படுத்தி அப் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் வீட்டு திட்ட பயனாளிகளிடம் பணம் கோரியுள்ளதுடன், ஒருவருடன் தவறான முறையிலும் உரையாடியுள்ளதாக கிராம அபிவிருத்தி சங்க கூட்டத்தில் இன்று (02.04) பாதிக்கப்பட்டவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, பண்டாரிக்குளம், உக்குளாங்குளம் பகுதியை உள்ளடக்கிய பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் பிரதேச செயலகம் ஊடாக சிலருக்கு வீட்டுத் திட்டம் வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதியைச் சேர்ந்த நபரொருவர் கிராம அலுவலருக்கு தெரியாது வீட்டுதிட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளை தொடர்பு கொண்டு 25,000 ரூபாய் மற்றும் 50,000 ரூபாய் என பணம் கோரியுள்ளதுடன், அவ்வாறு பணம் தரும் பட்சத்தில் உங்களுடைய வீட்டுத்திட்டத்தை முன்னுரிமைப்படுத்தி வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். வீட்டுதிட்ட இடத்தையும் தான் பார்வையிட்டு சிபார்சு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒரு வீட்டில் வீட்டுத்திட்ட பயனாளியான பெண்ணின் வீட்டுதிட்ட காணியைப் பார்க்க வந்ததாக தெரிவித்து, அவருடன் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கிராம அலுவலரின் கவனத்திற்கும், கிராம அபிவிருத்திச் சங்கம், கிராமிய சிவில் பாதுகாப்பு குழு என்பவற்றின் கவனத்திற்கு பாதிக்கப்பட்டவர்கள் கொண்டு வந்துள்ள நிலையில், இது தொடர்பில் அப்பகுதி பொது அமைப்புக்கள் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கவும் தீர்மானித்துள்ளன.

hey