கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 6 வான்கதவுகள் திறப்பு : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைஇரணைமடுகுளத்தின்

பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதல் இரணைமடுகுளத்தின் 6 வான்கதவுகளில் இரண்டு வான் கதவுகள் 1 அடி 6 அங்குலமும், மற்றைய இரண்டு வான் கதவுகள் 1 அடியாகவும், மேலும் 2 வான் கதவுகள் 6 அங்குலமாகவும் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் இரணைமடு குளத்திற்கு நீர் வருகை அதிகரித்தால் மேலும் வான்கதவுகள் திறக்கப்படலாம் எனவும், இதனால் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பன்னங்கண்டி, முரசுமோட்டை, ஊரியான், கண்டாவளை, பரந்தன், உமையாள்புரம் உள்ளிட்ட தாழ்வு நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும் பரவலாக பலத்த மழை பெய்து வருவதால் ஏனைய குளங்களும் வான் பாயும் நிலையில் உள்ளன எனவும், குளங்களின் கீழ்பகுதியில் உள்ள மக்களையும் விழிப்புடன் செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ள அனர்த்த பகுதிகளாக காணப்படும் பொன்னகர், கனகாம்பிகை குளம், ஆனந்தபுரம் கிழக்கு, இரத்தினபுரம், பிரமந்தனாறு, தர்மபுரம், உழவனூர், பெரியகுளம், கல்லாறு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான, வசந்தநகர், முறிகண்டி, செல்வபுரம் பகுதிகளில் உள்ள மக்களும் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இடர் ஏற்படும் சந்தர்ப்பங்களில் கிராமசேவையாளர், படையினர் மற்றும் பொலிஸாரின் உதவிகளை பெற்றுக் கொள்ளுமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

hey