நத்தார் பண்டிகை மற்றும் புதுவருட கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை : பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்நத்தார் பண்டிகை மற்றும் புதுவருட பிறப்பை முன்னிட்டு பாரியளவிலான கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதியில்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. இந்நிலையில் நத்தார் தினத்திற்கும், 2021 ஆம் ஆண்டுக்கான புதுவருட பிறப்பிற்கும் இன்னமும் சில தினங்களே உள்ளன.

அதற்கமைய கடந்த வருடங்களைப் போன்று இந்த நிகழ்வுகளை கொண்டாடும் வகையில் பாரியளவிலான கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்த இம்முறை அனுமதி வழங்கப்படமாட்டாது.

எந்த கொண்டாட்டமாக இருந்தாலும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கமைய அனைவரும் தமது குடும்ப அங்கத்துவர்களுடன் மாத்திரம் இணைந்து வீடுகளிலேயே கொண்டாட வேண்டும்.

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக பாரியளவிலான கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்துவதால் வைரஸ் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முழுமையான ஒத்துழைப்பை மக்களிடம் எதிர்பார்க்கின்றோம்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறும் அனைவரும் கைது செய்யப்படுவர். இன்று செவ்வாய்கிழமை காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 1,675 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் இது தொடர்பான சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படும் என்பதால் அனைவரும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.

hey