ரஜினிகாந்த் ஆரம்பிக்கவுள்ள கட்சியின் பெயர் கொடி எப்படி இருக்கும் தெரியுமா…? வெளியாகிய தகவல்



நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் தொடங்கவுள்ள கட்சியின் பெயர் மற்றும் கொடி தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்கும் திகதியை ஜனவரி 31ஆம் திகதி அறிவிக்க உள்ளார்.

ஜனவரியில் எந்த திகதியில் கட்சி ஆரம்பிக்க உள்ளார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதைவிட கட்சிக்கு என்ன பெயர் வைக்கப்பட உள்ளது, கொடி எவ்வாறு வடிவமைக்கப்பட உள்ளது என்ற விவாதம் கிளம்பியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான கட்சிகள் கழகம் என்ற பின்னொட்டுடனே அமைந்துள்ளன.
இதில் பாஜக, பாமக போன்ற கட்சிகள் விதிவிலக்கு.

அண்மையில் கட்சி தொடங்கிய கமல்ஹாசன் கழகம், கட்சி ஆகியவற்றிலிருந்து சற்றுவிலகி ‘மய்யம்’ என்ற பின்னொட்டை வைத்துக் கொண்டார்.

அந்தவகையில் ரஜினிகாந்தும் கழகங்களுக்கு மாற்றாக தன்னை முன்னிலைப்படுத்துவதால் கட்டாயம் கழகம் இருக்காது என அடித்துக் கூறுகின்றனர்.

அதேசமயம் வேறு என்ன இடம்பெறலாம் என்ற பரிசீலனையும் நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த் சைவ சமயம் மேல் தீவிர ஈடுபாடு கொண்டவர். தனது படங்களிலேயே அண்ணாமலை, அருணாச்சலம், படையப்பா என பெயர்கள் வைத்து வெற்றிப் படங்களாக்கியவர். அந்த வகையில் ‘படை’ என்று முடியும் வகையில் கட்சி பெயர் அமையவுள்ளதாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

அதே போல் கட்சி கொடி வடிவமைக்கும் பணிகளும் வேகமெடுத்துள்ளன. ரஜினி ரசிகர்கள் தற்போது நீலம், வெள்ளை, சிவப்பு ஆகிய வண்ணங்களிலும் நடுவில் ஸ்டார் சின்னத்தில் ரஜினிகாந்த் படத்தை பொறித்தும் கொடி பிடிக்கின்றனர். இது சூப்பர் ஸ்டார் ரஜினி என்பதை பொருள்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. ஆனால் ரஜினியின் கட்சிக் கொடி இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கும் என்கின்றனர்.

கட்சிக்கும் ஆட்சிக்கும் இடையே இடைவெளி இருக்கும். கட்சியின் தலையீடு ஆட்சியில் இருக்காது. முதல்வர் வேட்பாளராக நான் இருக்க மாட்டேன் என ரஜினிகாந்த் கூறிவந்துள்ளதால் கட்டாயம் ரஜினியின் புகைப்படம் கொடியில் இடம்பெறாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

hey