வவுனியாவில் சீரற்ற காலநிலையால் 424 பேர் பாதிப்பு : 57 வீடுகள் பகுதியளவில் சேதம்புயலின் காரணமாக…

வவுனியா மாவட்டத்தில் புரெவி புயல் தாக்கம் மற்றும் மழை காரணமாக 137 குடும்பங்களைச் சேர்ந்த 424 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 57 வீடுகளும், 3 சிறு கைத்தொழிற்சாலை நிலையங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த இரு நாட்களாக பெய்து வந்த மழை மற்றும் புயல் காற்றின் தாக்கம் காரணமாகவே குறித்த பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
வவுனியா பிரதேச செயலக பிரிவில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 15 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 3 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

மேலும் வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 35 குடும்பங்களைச் சேர்ந்த 96 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 35 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட 35 குடும்பங்களும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 84 குடும்பங்களைச் சேர்ந்த 255 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 4 வீடுகளும், 3 சிறு கைத்தொழிற்சாலைகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இங்கு பாதிக்கப்பட்டவர்களில் தாழ்நிலம் மற்றும் தற்காலிக வீடுகளில் வசித்த 81 குடும்பங்களைச் சேர்ந்த 244 பேர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் பாதுகாப்பிற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்தமையால் வவுனியாவில் 117 குளங்கள் வான் பாய்வதுடன், 4 குளங்கள் உடைப்பெடுப்பதை தடுக்கும் வகையில் நீரை வெளியேற்றுவதற்காக குளக்கட்டின் ஊடாக நீர் வெளியேற்றும் வகையில் வெட்டி விடப்பட்டுள்ளதாகவும்,

குளம் உடைபெடுத்தால் தடுக்கும் வகையில் மண் போட்டு நிரப்புவதற்காக 10 குளங்களுக்கு பைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கமநல அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் இ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏ9 வீதி, சாஸ்திரிகூழாங்குளம், உக்கிளாங்குளம், கோதாண்டார் நொச்சிக்குளம், நெடுங்கேணி போன்ற பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் முன்னால் புயல் காரணமாக வீழ்ந்த மரத்துடன் பாரவூர்தி ஒன்று மோதியதில் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,

காணாமல் ஆக்ப்பட்டோரின் உறவுகளின் போராட்ட கொட்டகையும் மரம் விழுந்து சேதமடைந்துள்ளது. கோதாண்டர் நொச்சிக் குளத்தில் ஆலயம் ஒன்றில் நின்ற புளியமரம் விழுந்ததில் ஆலயம் சேதமடைந்துள்ளது.

நெடுங்கேணி வைத்தியசாலையும் காற்று மற்றும் மழை காரணமாக பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அத்துடன், மழையுடனான காலநிலை காரணமாக மக்களது இயல்பு வாழ்க்கையும் முழுமையாக பாதிப்படைந்துள்ளது.

hey