முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று (10.02) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 29 வயதான ஒரு பிள்ளையின் தாயாவார். இந்த பெண் 11 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்து நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
வீட்டில் உள்ள அனைவரும் தூங்கச் சென்ற நிலையில், வீட்டை விட்டு வெளியே சென்ற பெண் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் மற்றும் உள்ளூர்வாசிகள் சேர்ந்து அவரை தேடியுள்ளனர்.
பின்னர் இன்று காலை வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு நீதவான் ஸ்தல விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.