தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (03.02) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
தற்போது சுற்றாடல் அமைச்சராக கடமையாற்றும் ரம்புக்வெல்ல, விரிவுபடுத்தப்பட்ட விசாரணைகளில் இதுவரை கைது செய்யப்பட்ட உயர் பதவியில் உள்ள அதிகாரி ஆவார்.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய நேற்று (02.02) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டியிருந்த நிலையில், ஆஜராகவில்லை.
இதனையடுத்து மாளிகாகந்த நீதவான் லோச்சனா அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்ததுடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்தார்.
குறித்த தடுப்பூசி சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஜனவரி 30 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு ரம்புக்வெல்ல அழைக்கப்பட்டிருந்த போதிலும், கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு ஒன்று இருப்பதாகவும், ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு இருப்பதாகவும் கூறி அவர் வேறு திகதி கோரியிருந்தார்.
எவ்வாறாயினும், வியாழக்கிழமை சாட்சியமளித்த அரசாங்கத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல், அவர் சம்பந்தப்பட்ட கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.