தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01.02) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார நிபுணர்களின் தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
அண்மையில், வைத்தியர்களுக்கான DAT கொடுப்பனவை 35,000 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரி பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
தமது கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடி தீர்வுகளை எட்டுவதற்கு அதிகாரிகள் இணக்கம் தெரிவித்த போதிலும் இதுவரை தீர்வுகள் கிடைக்கவில்லை என சுகாதார நிபுணர்களின் தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்று காலை 6.30 மணி முதல் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அகில இலங்கை தாதியர் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாது என அதன் தலைவர் திரு.ரவீந்திர கஹடவராச்சி தெரிவித்தார்.
இதேவேளை, இன்றைய பணிப்புறக்கணிப்பு நியாயமான காரணத்துக்கான பணிப்புறக்கணிப்பு அல்ல என ஒருங்கிணைந்த சுகாதார சேவைகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வணக்கத்துக்குரிய தம்பிட்டிய சுகதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.