DAT கொடுப்பனவை வலியுறுத்தி இன்று (24.01) முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க மருத்துவர்கள் சங்கம் அறிவித்திருந்த நிலையில், அந்த போராட்டத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்களுக்கான மேலதிக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த 35,000 கொடுப்பனவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதை எதிர்த்து சிறப்பு மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு மருத்துவர்கள் காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த வேலை நிறுத்த போராட்டத்தை இடை நிறுத்தியுள்ளதாக அரசாங்க மருத்துவர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையில், ” சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் DAT கொடுப்பனவை ஜனவரி மாத சம்பளத்துடன் இணைத்து வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தி உத்தரவு பிறப்பித்துள்ள சுற்றுநிருபத்தை உடனடியாக ரத்துச் செய்யுமாறு சுகாதார நிறுவனங்களின் பிரதானிகளுக்கு சற்று முன்னர் எழுத்துபூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று ஜனவரி மாத சம்பளத்துடன் DAT கொடுப்பனவை பெற்றுக் கொள்ள முடியாது போகும் மருத்துவர்களுக்கு தனியான வவுச்சர் மூலம் குறித்த கொடுப்பனவை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.