வவுனியா, புளியங்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிள் ஒன்றின் இருக்கைக்குள் மறைத்து கொண்டு செல்லப்பட்ட கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, புளியங்குளம் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்த போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து மோட்டர் சைக்கிளில் ஏ9 வீதி ஊடாக பொல்காவலை நோக்கி பயணித்த குடும்பஸ்தரை மறித்து சோதனை செய்தனர்.
இதன்போது, மோட்டர் சைக்கிள் இருக்கைப் பகுதிக்குள் சூட்சுமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 375 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த நபரை கைது செய்த பொலிஸார், கஞ்சாவை மீட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர், 46 வயதுடைய குடும்பஸ்தர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரையும், கஞ்சாவையும் நீதிமன்றில் முற்படுத்த புளியங்குளம் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.