நவகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கடுவெல, கொரதொட்ட பகுதியில் உள்ள வீடொன்றிற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் என கூறிக்கொண்டு நேற்று (10.01) இரவு வந்த இருவரினால் குறித்த வீட்டில் இருந்து நபர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு தலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடத்தப்பட்ட நபர் துனதஹேன, தெல்கஹவத்த, மஹவெல, மாலம்பே பகுதியில் உள்ள பாலம் ஒன்றிற்கு அருகில் அழைத்து சென்று, ஒன்பது மில்லிமீற்றர் துப்பாக்கியால் தலையில் சுடப்பட்டதாகவும், காயமடைந்த நபர் அத்துகிரிய ஒருவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடுவெல கொரதொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான புத்திக பிரசாத் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இவர் 2011ஆம் ஆண்டு கொலை மற்றும் துப்பாக்கி வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டின் பேரில் இந்த நபர் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக நவகமுவ காவல்துறையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் பணிப்புரையின் பிரகாரம் நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.