மாத்தறை சிறைச்சாலையில் மூளைக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
மாத்தறை சிறைச்சாலையில் பரவி வந்த மூளைக் காய்ச்சல் காரணமாக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் கடந்த 22ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
பின்னர், இதே அறிகுறிகளுடன் மேலும் 7 கைதிகளை மருத்துவமனையில் சேர்க்க சிறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இந்த நோயாளிகளுக்கு மூளைக் காய்ச்சல் இருந்ததாக சந்தேகிக்கப்பட்டது.
பின்னர், சிறைச்சாலையின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், 10 நாட்களுக்கு, கைதிகளை பார்வையிட வெளியில் இருந்து வருபவர்களை கட்டுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும், நீதிமன்றங்களால் சிறைச்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட புதிய கைதிகள் அகுனுகொலபலஸ்ஸ மற்றும் புஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்றிரவு அறிகுறிகளுடன் 08 கைதிகளும், சிறைச்சாலையில் இருந்து வீடு திரும்பிய மற்றுமொரு கைதியும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது 16 நோயாளர்கள் மாத்தறை பொது வைத்தியசாலையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை, நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மாதிரிகள் பரிசோதனை நிலையில் உள்ளதாகவும், பரிசோதிக்கப்பட்ட 4 மாதிரிகளில் 3 பேருக்கு மூளைக் காய்ச்சல் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நோயாளியின் சரியான நிலை இன்னும் அறியப்படவில்லை என்று பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.