Sunday, March 9, 2025

வெள்ளத்தில் மூழ்கிய வவுனியா நெடுங்கேணி

- Advertisement -
- Advertisement -

வவுனியா வடக்கு பிரதேசத்தில் நெடுங்கேணி நகரில் வெள்ளம் அதிகரித்தமையால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. வவுனியா வடக்கில் உள்ள பிரதான நகரங்களில் நெடுங்கேணி முதன்மையானது.

வவுனியா – வடக்கு பிரதேச செயலகம் நெடுங்கேணியில் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.தொடர்ச்சியாக பெய்து கொண்டிருந்த மழையினால் நெடுங்கேணி இலங்கை வங்கியினைச் சூழவுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இலங்கை வங்கிக்குள்ளும் அதனைச் சூழவுள்ள வியாபார நிலையங்களுக்குள்ளும் வெள்ள நீர் உட்புகுந்தமையால் மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து அசௌகரியங்களுக்கு உள்ளானதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வங்கி விடுமுறை நாளான போதும் ATM தன்னியக்க இயந்திரத்தில் பணத்தைப் பெற சென்றவர்கள் வெள்ள நீருக்குள்ளால் செல்ல நேரிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

வங்கி கட்டடத் தொகுதியில் அடுத்துள்ள வங்கியை அடுத்துள்ள கடைகளுக்குள்ளும் வெள்ளம் உட்சென்றதால் பொருட்கள் சேதமடைந்ததாகவும் வியாபாரச் செயற்பாடுகளும் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இலங்கை வங்கியைச் சூழ உள்ள மக்கள் குடியிருப்புக்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இலங்கை வங்கிக்கு எதிராக நெடுங்கேணி பொலிஸ் நிலையமும் பிராந்திய வைத்தியசாலையும் நெடுங்கேணி கமநல சேவைகள் நிலையமும் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.இவற்றின் செயற்பாடுகளும் வெள்ளத்தால் பாதிப்படைந்ததாக பிராந்திய சமூக செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.

நெடுங்கேணியில் தாழ்வான பகுதிகளில் நிரம்பிய வெள்ள நீர் மேட்டு நிலங்களிலும் பரவியமை விபரீதமான சூழலை தோற்றுவித்ததாக மக்கள் குறிப்பிடுகின்றனர். நெடுங்கேணி இலங்கை வங்கிக்கு பின்னால் நெடுங்கேணி குளம் அமைந்துள்ளது.

அதிக நீர் வரத்தால் அக்குளம் நிரம்பியமையாலேயே வெள்ள நீர் வீதியை மூடியும் மக்கள் செயற்பாட்டிடங்களிற்குள்ளும் செல்ல காரணமாய் அமைந்தது என வியாபார நிலைய உரிமையாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular