வவுனியா மாவட்டத்தில் நெற்செய்கையில் வெண்புழுத்தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளை அவதானமாக இருக்குமாறு பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பொ.அற்புதச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வவுனியாவில் இன்று (08.12.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வவுனியாவில் நெற்செய்கையில் வெண்புழுத் தாக்கம் நோய் அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பன்றிக்கெய்தகுளம் மற்றும் செங்காரத்தி மோட்டை பகுதிகளில் இதனை நாம் நேரடியாக அவதானித்தோம்.
எனவே வவுனியா மாவட்ட விவசாயிகளை எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். இந்த பூச்சிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் அதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை விவசாயிகள் முன்னெடுக்கவேண்டும்.
அனைத்து, விவசாயிகளும் ஒற்றுமையாக இதனை முன்னெடுக்கும் போதே அதன் தாக்கத்தினை குறைக்க முடியும்.எனவே, இரசாயன விடயங்களை தவிர்த்து இயற்கை முறையில் இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முதலில் முன்னெடுக்க வேண்டும்.
கடுமையான தாக்கம் ஏற்ப்பட்டால் மாத்திரமே இரசாயன பாவனையினை பயன்படுத்துவதற்கான பரிந்துரை செய்யப்படுகின்றது. அந்தவகையில், இராசயனங்களான டையோமெக்சிக்கம், 50 வீதம் நனையக்கூடிய தூளினை 10 லீற்றர் நீரில் கலந்து பாவிக்கலாம்.
அல்லது பிபிஎம்சி 35 மில்லி லீற்றர் அளவினை 10 லீற்றர் நீரில் கலந்து பாவிக்கலாம். அல்லது டயோமெடோசான் 25 வீதம் நனையக்கூடிய குருனலை 3 கிராம் அளவில் 10 லீற்றர் நீரில் பயன்படுத்தலாம்.அல்லது பிப்றோனின் 50கிராம் 15 மில்லிலீற்றர் அளவில் 10 லீற்றர் நீரிலே கலந்து பயன்படுத்தலாம்.
அத்துடன் இது தொடர்பாக மேலதிகமான தகவல்களை பெறுவதற்கு அருகில் உள்ள விவசாய போதனாசிரியர்களை நாடி அவர்கள் மூலமாக தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும்” என கூறியுள்ளார்.