பெண்கள் மற்றும் சிறுமிகளிற்கெதிரான வன்முறைகளை தடுக்குமாறு வலியுறுத்தி வவுனியாவில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் இன்று (07.12.2023) காலை ஆரம்பமான குறித்த பேரணி கண்டி வீதி வழியாக வைத்தியசாலை சுற்றுவட்டத்தை அடைந்து அங்கிருந்து மாவட்டசெயலகம் வரை சென்றடைந்தது.

இதன்போது கருத்து தெரிவித்த பெண்கள், ”பெண்களுக்கெதிரான வன்முறை இல்லாது ஒழிக்கும் பொருட்டு நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரையான 16 நாட்கள் செயல்வாத விழிப்புணர்வு ஒன்றை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
குறிப்பாக உலகில் அதிகமான வன்முறைகளுக்கு உள்ளாகும் தரப்பாக பெண்களே உள்ளனர். அவர்களுக்கான உதவிகள் கிடைக்கப்பெறாத நிலையில் வீட்டினுள்ளே முடங்கிக் கிடக்கும் நிலை தற்போது காணப்படுகின்றது.
எனவே வன்முறைகளை தடுத்து அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு முன்னுரிமை கிடைக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது” என தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பேரணியில் ஈடுபட்டவர்கள் ”ஆணும்பெண்ணும் இவ்வுலகில் சமமே”, ”பெண்களுக்கெதிரான பாரபட்சங்களை இல்லாது ஒழிப்போம்” போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.