யாழில் சிறையில் இருந்த கைதி ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி வட்டுக்கோட்டை பொலிசார் தன்னை மூன்று மணித்தியாலங்கள் கட்டி வைத்து தாக்கி சித்திரவதை செய்ததாக உயிரிழந்த இளைஞன் வைத்தியசாலையில் தெரிவித்த வீடியோ ஆதாரங்கள் தற்போது உறவினர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவில் களவு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உயிரிழந்தமை தொடர்பில் உறவினர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை செய்வதற்காக யாழ்ப்பாணம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிஸ் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தமது மகன் சந்தேகத்தின் பேரில் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 4 நாட்களுக்கு மேல் தடுத்து வைத்து விசாரணை நடத்திய பின்னரே நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதாக பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மல்லாகம் நீதிவான் நீதிமன்ற உத்தரவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நரான சித்தங்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் என்ற இளைஞர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் உள்ளிட்ட இருவர் கடந்த வாரம் திருட்டுச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் நான்கு நாட்களாக வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்படவில்லை, விடுவிக்கப் படவும் இல்லை என்பதால் உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்.
தாயார் இலங்கை மனித உரிமைகள் குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார். அதனால் சந்தேக நபர்கள் கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
பொலிஸாரின் ஆட்சேபனையை அடுத்து சந்தேக நபர்கள் இருவரும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட நிலையில் குறித்த இளைஞர் திடீர் சுகவீனம் காரணமாக சிறைக் காவலருடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூறு பரிசோதனையின் பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.