உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்டிமார் தும்பவத்தை தோட்டத்தில் வசிக்கும் 14வயதுடைய தியாகராஜ் சரணியா எனும் சிறுமி காணாமல் சென்ற நிலையில் வவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து இன்று (10.11.2023) மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியை காணவில்லை என கடந்த (03.11.2023) அன்று குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். அத்துடன் சிறுமியின் புகைப்படமும் பிரசுரிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த சிறுமியை தேடி வந்த பொலிஸார் வவுனியா நகர் இலுப்பைக்குளம் பகுதியில் இளைஞர் ஒருவருடன் தங்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தானும் அவ் இளைஞனும் தொலைபேசியூடாக காதலித்ததாகவும் அவருடன் வாழ ஆசைப்பட்டு தான் இங்கே வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் சிறுமி பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையுடன் 18வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.