வவுனியா பண்டாரிக்குளம் பிரதான வீதியினை புரனமைத்து தருமாறு கோரி அப்பகுதி மக்களினால் இன்று (01.11.2023) காலை 8.30 மணியளவில் கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

பல வருடங்களாக குறித்த வீதி எவ்வித புரனமைப்பும் இன்றி காணப்படுவதுடன் தற்போது குன்றும் குழியுமாக காணப்படுவதினால் பாதையினை பயன்படுத்துவதில் தம் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுப்பதாக தெரிவித்தமையுடன் உடனடியாக இவ் வீதியினை செப்பனிட்டு தருமாறு கோரியே இவ் போராட்டம் இடம்பெற்றிருந்தது.
வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரி முன்பாக ஆரம்பமான இவ் கவனயீர்ப்பு போராட்டமானது பண்டாரிக்குளம் பிரதான வீதியூடாக ஊர்வலமாக சென்று புகையிரத நிலைய பிரதான வீதியினை சென்றடைந்து சிறிது நேரம் குறித்த வீதியினை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் 3000 மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலை அமைந்துள்ள பிரதான வீதியினை உடனே புனரமைப்பு செய் , ஏமாற்றாதே ஏமாற்றாதே இனியும் ஏமாற்றாதே , மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரே பதில் சொல் நிதி எங்கே? , வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் , நான்கு கிராம சேவையாளர் பிரிவு மக்கள் துன்படுவது உங்களுக்கு தெரியவில்லையா? போன்ற பல்வேறு வசனங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் 50க்கு மேற்பட்டவர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்