காஸா பகுதியில் பணியாற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என இஸ்ரேலியா பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
ரொய்ட்டர்ஸ் மற்றும் AFP செய்திச் சேவைகள் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இஸ்ரேல் இதனைத் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமது செய்திச் சேவைகள் மற்றும் ஏனைய ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட செய்திச் சேவைகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதற்கு பதிலளித்துள்ள இஸ்ரேல், ஹமாஸ் இராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும், அங்கு சுற்றியுள்ள பகுதிகளும் சேதமடையலாம் என்றும் கூறியுள்ளது. ஆகவே ஊடகவியலாளர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அல்ஜசீரா பத்திரிகையாளரின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர். காஸா பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் இதுவரை 27 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.