வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருக்கும் வைத்திய அதிகாரிகளை தக்கவைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.
அந்த சங்கத்தின் மத்திய குழு கூட்டம் இன்று இடம்பெற்றிருந்த நிலையில் அதில் குறித்த தொழிற்சங்க நடவடிக்கைகள் உள்ளிட்ட பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த தீர்மானங்கள் தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், மூளைசாலிகளின் வெளியேற்றம் பற்றிய அழுத்தமான பிரச்சினை குறித்து சுகாதார அமைச்சு கவனம் செலுத்தாமல் உள்ளது போல தோன்றுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் விசேட பிரமுகர்களின் சுகாதாரப் பாதுகாப்புக்காக முன்னெடுக்கப்படும் நடமாடும் நோயாளர் வண்டி சேவைகளில் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை விலகுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மறுஅறிவித்தல்வரை வைத்தியசாலை கடமைகளுக்கு வெளியே திட்டமிடப்பட்ட நடமாடும் பிணியாய்வு உட்பட தொடர்புடைய பிற கடமை நடவடிக்கைகளில் இருந்து விலகுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அத்துடன், தம்மால் முன்மொழியப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரிகளின் போதிய பதிலை வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதிக்குப் பிறகு மாகாண மட்டத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு அந்த சங்கம் தீர்மானித்துள்ளது.