Friday, April 18, 2025

அஸ்வெசும கொடுப்பனவு பெறாதவர்களுக்கு விரைவில் பணம் : மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

- Advertisement -
- Advertisement -

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளுக்காக தெரிவு செய்யப்பட்டு கொடுப்பனவினை பெற்றுக் கொள்ளாதவர்கள் விரைவில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து தாமதமின்றி அந்த நன்மைகளை பெற்றுக் கொள்ளுமாறு நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவின் தலைமையில் அதிபர் அலுவலகத்தில், அஸ்வெசும வேலைத்திட்டம் தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை உள்ளிட்ட உரிய தரப்பினருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்போது, உரிய வகையில் வங்கிக் கணக்குகளை திறக்காததன் காரணமாக ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 261 பயனாளிகளுக்கு கொடுப்பனவுகளை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், குறித்த விடயம் தொடர்பிலான பிரச்சினைகளை நிவர்த்தி செய்து பயனாளிகளுக்கு விரைவில் கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அஸ்வெசும பயனாளிகளுக்காக கடந்த ஜூலை மாதத்துக்கான கொடுப்பனவு கடந்த 16ஆம் திகதிவரை 5 கட்டங்களின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், 12 இலட்சத்து 30 ஆயிரத்து 97 குடும்பங்களுக்கு 770 கோடியே 53 இலட்சத்து 2 ஆயிரத்து 250 ரூபா தொகையிலான நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, ஜூலை மாதத்துக்கான கொடுப்பனவை பெறாதவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் பகிர்ந்தளிக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.அதேவளை, மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பிலான விசாரணைகள் நிறைவு செய்யப்படாமல் உள்ளதன் காரணமாக பயனாளிகளுக்கு உரிய கொடுப்பனவுகளை வழங்கும் செயற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக இதன்போது தெரியவந்துள்ளது.

அத்துடன், 2 இலட்சம் பயனாளிகள் இதுவரையில் வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்காததன் காரணமாகவே அவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை.

இது தொடர்பில் கருத்து மேலும் தெரிவித்த நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன,வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதில் சிக்கல் ஏற்படாது சுட்டிக்காட்டினார்.

பிரதேச சபையினால் அஸ்வெசும கணினிக் கட்டமைப்பிலிருந்து வழங்கப்படும் கடிதத்தின் மூலம் தமது பிரதேசங்களிலுள்ள மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கிக் கிளைகளில் அஸ்வெசும பயனாளிகள் தங்களுக்கான கணக்குளை ஆரம்பிக்க முடியும் என்றும் அதன் பின்னர் வங்கியினால் அந்த தகவல்கள் நலன்புரி நன்மைகள் சபைக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தேசிய அடையாள அட்டை இல்லாததன் காரணமாக வங்கிக் கணக்குகளை திறக்காதிருப்பவர்களுக்கு 6 மாதங்களுக்குள் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் குறித்த வங்கிகளில் கணக்குகளை திறப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular