திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெவ்வேறு இடங்களில் நிர்மாணிக்கப்பட்ட புத்தர் சிலைகளின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட இளைஞர் அனைத்து மதங்களையும் விமர்சிப்பவர் எனவும் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
போட்டங்காடு சந்தி அக்ரபோதி விகாரைக்கு முன்னால் உள்ள சிலை உள்ளிட்ட நான்கு சிலைகளின் கண்ணாடிகளை சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கந்தளாய் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.