எதிர்காலத்தில் பாடசாலை வகுப்பறையில் பிள்ளைகள் தங்குவது கட்டாயமாக்கப்படும் எனவும் அது அனைத்து தரங்களுக்கும் பொருந்தும் எனவும் கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.
அதி வணக்கத்துக்குரிய நிவிதிகல தம்மானந்தா நினைவு புலமைப்பரிசில் அறக்கட்டளையின் அயகம பிரிவின் 2022 புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்படி மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைய தினமும் பாடசாலைக்கு வருகை தருவது இன்றியமையாதது என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த வலியுறுத்தியுள்ளார்.
புதிய கல்வி மாற்றத்தில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் கூட வகுப்பறையில் தங்கியிருந்து கல்விகற்க வேண்டிய நிலை உருவாகும் என சுட்டிக்காட்டிய அவர், கல்வி என்பது ஆயிரத்து ஐந்நூறு குழந்தைகளை ஒரு மண்டபத்தில் கூட்டி விரிவுரைகள் செய்வதன் மூலம் அடையக்கூடிய ஒரு செயல்முறை அல்ல எனவும், இது குழந்தைகளின் ஒழுக்கம் மற்றும் பல திறன்களை வளர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய சிக்கலான செயல்முறை என்றும் விளக்கினார்.
கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் தேவையான உதவிகளை பெற்றுக்கொள்வதில் தவறில்லை எனவும், வர்த்தகம் சார்ந்த தொழிலாக பரிணமித்துள்ளமை விரும்பத்தகாத சூழ்நிலையல்ல எனவும், தற்போதைய சூழலில் பெற்றோர்களே அதிகளவிலான சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார, சமூக சவால்கள், தங்கள் குழந்தைகளின் கல்வி வகுப்புகளுக்கு பெரும் தொகையை ஒதுக்க வேண்டிய அவல நிலையை உடனடியாக தடுக்க வேண்டும் என கூறிய அவர், சம்பளம், பௌதீக மற்றும் மனித வளங்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் பாடசாலைகளை நடத்துதல் என்பன மறைந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.