கோவிட் தொற்றுநோய்களின் போது கலந்தாலோசிக்காமல் குறைக்கப்பட்ட கிழக்கு மாகாண ஆசிரியர்களின் நாளாந்த சம்பளத்தை நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் இன்று (05.10) உச்ச நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆசிரியர்களின் கருத்துக்களைக் கேட்காமல், கிழக்கு மாகாண கல்வி அதிகாரிகளின் நாளாந்த சம்பளத்தை குறைக்கும் தீர்மானத்திற்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி இவ்வாறு உறுதிமொழி வழங்கினார்.
இதன்படி மனு மீதான விசாரணையை முடித்து வைப்பதாக விஜித் மலல்கொட, காமினி அமரசேகர மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்மானித்துள்ளது.
கோவிட் தொற்றுநோய் காலத்தில் கிழக்கு மாகாணத்தில் பணியாற்றிய அரச ஊழியர்களின் நாளாந்த சம்பளத்தை குறைக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பட் சுற்றறிக்கை விடுத்துள்ளதாக மனுவை தாக்கல் செய்த இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி கிழக்கு மாகாணத்தில் பணியாற்றிய ஆசிரியர்களின் நாளாந்த சம்பளம் தம்மை கலந்தாலோசிக்காமல் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தி மனுத்தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.