இரவு விடுதி போன்ற அமைப்பைக் கொண்ட மற்றும் தடை செய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி மாற்றியமைத்து போக்குவரத்து கடமைகளில் ஈடுபடுத்தப்பட்ட 25 சிறப்பு சுற்றுலா பஸ்களின் போக்குவரத்து உரிமங்கள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், போக்குவரத்து விதிமுறைகளுக்கமைய அவை மீளவும் உரிய முறையில் தயார்ப்படுத்தப்படும் வரை அவற்றை போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இதேவேளை வீதிகளில் ஆபத்தான முறையில் பயணித்த 58 பேருந்துகள் கடும் எச்சரிக்கையுடன் பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் விடுவிக்கப்பட்டுள்ளன.
மக்கள் செய்த முறைப்பாடுகளின் பிரகாரம் இன்று பெட்டாலிங் ஜயா பகுதிக்கு பஸ்கள் மற்றும் உரிமையாளர்கள் வரவழைக்கப்பட்டு மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளில் உள்ள அனைத்து சட்டவிரோத உதிரிபாகங்களையும் அகற்றுமாறு பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு போக்குவரத்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இங்கு, சில பேருந்துகளின் உட்புறம் கிளப்புகளாகவும், சில பேருந்துகளில் விருந்துகள் நடத்த தனிப் பகுதியும் அமைக்கப்பட்டிருந்ததைக் காண முடிந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை, சட்டவிரோதமான முறையில் பேரூந்துகளை ஏற்பாடு செய்து வீதியில் மிகவும் ஆபத்தான வகையில் பயணிக்கும் பேருந்து சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.