முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக வடக்கு, கிழக்கில் இன்று (03.10) சட்டதரணிகள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதன்படி, யாழ்ப்பாண நீதிமன்ற வளாக செயற்பாடுகளும் முற்றாக முடங்கியுள்ளன. குறித்த போராட்டமானது நாளைய(04.10) தினமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரியில் பணிப் புறக்கணிப்பு காரணமாக வழக்கு விசாரணைகள் இடம்பெறவில்லை எனவும் வழக்குகள் தவணையிடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோல் மட்டக்களப்பிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் நீதித்துறை சுதந்திரத்துக்காய் குரல் கொடுப்போம்,சட்டத்தின் முன் யாவரும் சமம், நீதிதுறையை அச்சுறுத்தாதே, பாரபட்சமற்ற விசாரணை வேண்டும், சுதந்திரத்தில் தலையிடாதே போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளிலும் சட்டதரணிகளால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.