முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானுமான டி.சரவணராஜாவின் திடீர் பதவி விலகல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இலங்கை சட்டதரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் பதவி விலகல் அச்சுறுத்தல்களால் தூண்டப்பட்டதாகக் கூறப்படுகின்ற நிலையல், இது குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
“சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும், நீதித்துறையின் அனைத்து உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் சட்டதரணிகள் சங்கம் உறுதி பூண்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது, “நீதிபதிகள் அச்சமின்றி தங்கள் கடமைகளை ஆற்றக்கூடிய சூழலைப் பேணுவதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் எனவும், இந்த அச்சுறுத்தல்களின் உண்மைத்தன்மையைக் கண்டறிவது மிகவும் முக்கியமானது என்பதை எடுத்துக்காட்டி, இந்த விஷயத்தில் ஒரு முழுமையான பக்கச்சார்பற்ற விசாரணையைத் தொடங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகள் உண்மையென கண்டறியப்பட்டால், நீதித்துறையின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவது மட்டுமன்றி நீதி அமைப்பு மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் சிதைக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“நீதிபதி டி. சரவணராஜாவின் ராஜினாமா இலங்கையில் நீதித்துறை அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பக்கூடும்” என்றும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.