உடல் உறுப்புகள் வெட்டப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் சடலம் களனி ஆற்றங்கரையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த 51 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் கடந்த வியாழக்கிழமை (28.09) மீட்கப்பட்டது.
உயிரிழந்தவர், டி.ஜி பிரதீபா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தலை துண்டிக்கப்பட்டு உடல் உறுப்புகள் சிதைக்கப்பட்ட நிலையில், கொடுரமாக கொலை செய்யப்பட்டு ஆற்றங்கரையில் வீசப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இறந்தவரின் உறவினர்கள் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
விசாரணையின் போது கிடைத்த சிசிரிவி காட்சிகளில் இறந்தவர் 55 வயதுடைய சந்தேக நபரை, கடுவெல நகரில் உள்ள உணவகம் ஒன்றிற்கு வெளியே சந்தித்ததாகவும், அதனைத் தொடர்ந்து KI 3030 என்ற இலக்கத் தகடு கொண்ட அவரது காரில் இருவரும் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அழைத்துச்சென்றவர் சியமபலபே பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் சுதீர வசந்த என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபர் இறந்தவருடன் 20 வருடங்களுக்கும் மேலாக நெருக்கமாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரின் சியாமபலபேயில் கைவிடப்பட்ட வீட்டில் இரத்தக் கறைகள், முடிகள் மற்றும் பெண்களின் ஆடைகளின் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டடுள்ளன. பணம் தொடர்பான பிரச்சினையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதாக முதற்கட் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சபுகஸ்கந்த மற்றும் முல்லேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.