வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்தவருமானம் பெரும் குடும்பங்களுக்கு, 25000 வீடுகளை கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாகாணத்தின் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (22.09) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்படி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் குறைந்த வருமானம் கொண்ட நிரந்தர வீடற்ற குடும்பங்களை இனங்கண்டு வீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
குறிப்பாக நிரந்தர வீடமைப்புத் திட்டத்தில் உட்கட்டமைப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடங்களை உடனடியாகக் கண்டறிந்து அதற்கான திட்டங்களைத் தயாரித்து தம்மிடம் ஒப்படைக்குமாறும் ஆளுநரால் அறிவுறுத்தப்பட்டது.
நிரந்தர வீடொன்றை நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் 5 மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளது. வீடொன்றுக்கு தேவையான வசதிகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என கூறப்படுகின்றது.
இவ்வீடுகளின் கூரைகளைப் பயன்படுத்தி சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தைப் பெறுவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் வடமாகாண ஆளுநர் தெரிவித்தார்.