வவுனியா இரட்டை கொலை சம்பவத்தின் சந்தேகநபர்கள் மற்றும் தேடப்படும் நபர்களின் வங்கிக்கணக்குகளை பரிசோதிக்க குற்றப் புலனாய்வு திணைக்கள கொலை விசாரணைப் பிரிவுக்கு வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன் அவர்கள் வெளிநாடு செல்ல தடை விதித்து அவர்களது கடவுச்சீட்டுக்களையும் முடக்குமாறு வவுனியா நீதிமன்றம் இன்று (24.08.2023) உத்தரவிட்டுள்ளது.வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த மாதம் 23ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணை வவுனியா நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு திகதியிடப்பட்டிருந்தது.எனினும் அடையாள அணிவகுப்புக்கு உரிய நபர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதால் குறித்த வழக்கு எதிர்வரும் 7ஆம் திகதிக்கு திகயிடப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணையின் போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் கொலை விசாரணைப் பிரிவினரால் முதலாம் மற்றும் இரண்டாம் சந்தேகநபர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலம் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், பிரதான சந்தேகநபரான 6ஆம் சந்தேகநபரை மீள விசாரணை செய்ய மன்றில் அனுமதி கோரியிருந்தனர். இதற்கு மன்று அனுமதி வழங்கியிருந்தது.
அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள கொலை விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட டிப்பர், பட்டா ரக வாகனம், 4 மோட்டர்சைக்கிள்கள், வாள்கள், கோடரிகள் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் மன்றில் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், சந்தேகநபர்களினதும், தேடப்படும் நபர்களினதும் வங்கிக் கணக்குகளை பரிசோதனை செய்ய நீதிமன்றத்திடம் குற்றப் புலானாய்வு திணைக்களத்தினர் அனுமதி பெற்றதுடன், அவர்கள் வெளிநாட்டு செல்ல தடை விதித்து அவர்களது கடவுச்சீட்டுக்களும் மன்றினால் முடக்கப்பட்டது.
பிரதான சந்தேகநபரான 6ஆவது சந்தேகநபர் சிறைச்சாலையில் கைத்தொலைபேசி பாவனை செய்துள்ள நிலையில், 3292 அழைப்புக்களை மேற்கொண்டுள்ளதாகவும் மன்றுக்கு தெரியப்படுத்திய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் அது தொடர்பில் விசாரணை செய்ய மன்றின் அனுமதியையும் பெற்றிருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மொடிஸ் ரஞ்சலமரகேவின் ஆலோசனைக்கு அமைவாக பொலிஸ் பரிசோதகர் இக்பால், பொலிஸ் சார்ஜன்ட் சந்தரூவான், பொலிஸ் கான்ஸ்டபிள் விஜயரட்ண மதுசங்க பண்டார ஆகியோர் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவை உலுக்கிய இரட்டைக் கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரிடம் இருந்து தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 23ஆம் திகதி அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த நபர்கள் அவ்வீட்டில் இருந்த ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர்.
இச்சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர்களான கணவன், மனைவி இருவரும் உயிரிழந்தனர்.குறித்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டதுடன், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் பிரதான சந்தேகநபர்கள் உட்பட 5 பேர் வவுனியா சிறைச்சாலையிலும், ஒருவர் அநுராதபுரம் சிறைச்சாலையிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வவுனியா சிறைச்சாலையில் இருந்த பிரதான சந்தேகநபர் தொலைபேசி பயன்படுத்தியுள்ளமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் கவனத்திற்கு இந்த சம்பவத்தை கொண்டு வந்ததையடுத்து இன்று (24.08.2023) அதிகாலை சிறைச்சாலையில் மேற்கொண்ட திடீர் சோதனையில் பிரதான சந்தேகநபரிடம் இருந்து கைத்தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த தொலைபேசியின் ஊடாக 3292 வெளிச் செல்லும் அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதுடன், அதில் 3 அழைப்புக்கள் குறித்த நபரின் மனைவிக்கும், பிறிதொரு பெண்ணுக்கு ஒன்றரை மணித்தியாலம் படி 35 தடவைகள் அழைப்பு மேற்கொண்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று குற்றப் புலனாய்வு திணைக்கள கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.