கனிஷ்ட பொதுநலவாய போட்டி தொடரில் பளு தூக்கும் போட்டிகளில் மூன்றாமிடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை சுவீகரித்துக் கொண்ட மாணவி கோசியா திருமேனனுக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்பு வழங்கப்பட்டது.அகில இலங்கை மெய்வல்லுனர் சங்க பிரதிநிதிகள் இந்த வரவேற்பினை வழங்கினார்கள். அவர்களோடு கோசியாவின் அம்மா மற்றும் சகோதரி, பயிற்றுவிப்பாளர் ஞானகீதன் ஆகியோரும் விமான நிலையம் சென்றிருந்தனர். ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லவதே தனது குறிக்கோள் என பதக்கம் வென்ற வீராங்கனை கோசியா தெரித்துள்ளார்.

34 வீர வீராங்கனைகள் பங்குபற்றிய இந்த விளையாட்டுப் போட்டியில் இலங்கை 18 பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது. இவற்றில் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் வீராங்கனைகளினால் வெல்லப்பட்டுள்ளன.பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் பளுதூக்கல் போட்டியில் பங்குகொண்ட வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி 3ம் இடத்தை பெற்று சாதித்திள்ளார்.
2023ம் ஆண்டிற்கான கனிஷ்ட பொதுநலவாய போட்டிக்கான பளு தூக்கல் போட்டிக்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த வடமாகாணத்தின் வவுனியாவிலிருந்து, வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய தரம் 09 மாணவி கோசியா திருமேனன் தெரிவாகியிருந்தார்.14 வயதான கோசியா திருமேனன், 16 வயதுக்குட்பட்ட 40 கிலோ எடை பிரிவில் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் 92 கிலோ கிராம் எடையை தூக்கியதன் மூலம் 3ம் இடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார்.
இந்த மாத ஆரம்பத்தில் நடைபெற்ற தேசிய ரீதியிலான போட்டியில் 87 கிலோ கிராம் எடையை தூக்கிய கோசியா இரண்டாமிடத்தை வெற்றி கொண்டிருந்தார். கனிஷ்ட பொதுநலவாய போட்டியில் 5 கிலோ அதிகமாக தூக்கி அவருடைய அதி கூடிய எடையை பதிவு செய்துள்ளார்.
வவுனியா, கணேசபுரம் பகுதியை சேர்ந்த கோசியா, இந்தியா செல்வதற்கான தயார்ப்படுத்தல்களினால் தேசிய போட்டிகளுக்கு பின்னர் எந்தவித பயிற்சிகளிலும் ஈடுபடவில்லை எனவும், வறுமையான குடும்பத்தை சேர்ந்த இவர் போட்டிகளுக்கு அணியும் பாதணியை கூட இரவல் வாங்கி சென்றதாகவும் அவரின் பயிற்றுவிப்பாளர் ஞானகீதன் தெரிவித்தார்.
பயணம் செய்வதற்கு கூட அதிகளவான பணமின்மையால் தான பயிற்றுவிப்பாளராக போட்டிகளுக்கு செல்லவில்லை எனவும், மொழி அவ்வளவாக தெரியாத நிலையில் இலங்கையின் ஏனைய வீர வீராங்கனைகளுடனும், அதிகாரிகளுடனும் இந்தியா டெல்லிக்கு சென்று இவ்வாறு வெற்றி பெறுவது பெரும் சாதனை என பயிற்றுவிப்பாளர் பெருமிதம் கொள்கிறார்.
இவருக்கு உரிய பயிற்சிகளை வழங்கி வளர்த்தெடுத்தால் கனிஷ்ட ஒலிம்பிக் போட்டிகளிலும், எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளிலும் சாதனை படைப்பர் எனவும் பயிற்றுவிப்பாளர் ஞானகீதன்நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.இவரது பாடசாலை விளையாட்டு ஆசிரியர்கள் வி.நிரஞ்சலா, ஜே.டி ரெஜினோல்ட், எஸ்.அகிலா ஆகியோரும் கோசியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளார் எனவும் பயிற்றுவிப்பாளர் நன்றி தெரிவித்தார்.